அன்னை தெரசா மிஷினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையால் 22,000-க்கும் அதிகமான நோயாளிகள், ஊழியர்களுக்கு உணவும், மருந்தும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் அன்று ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியதாகவும், இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் இன்றி தவித்து வருவதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி தொடர்ந்து, “சட்டம் மிக முக்கியமானது என்றாலும், அதற்காக மனிதாபிமான நடவடிக்கைகளை முடக்குவதை ஏற்கமுடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.
மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பை கடந்த 1950ஆம் ஆண்டு அன்னை தெரசா கொல்கத்தாவில் தொடங்கினார். அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளைத்தான் ஒன்றிய மோடி அரசு முடக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.