உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆக்ராவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் முன்பு இந்துத்துவா கும்பல் கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டா கிளாஸ்) உருவ பொம்மையைக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் புனித ஜான்ஸ் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வந்த அந்தாராஷ்டிரிய இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரீய பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென குவிந்து கிறிஸ்துவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது , கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவ பொம்மைக்கு தீ வைத்துக் கொளுத்தினர். இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து இந்துத்துவா கும்பல் கூறுகையில், ”மக்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதால் அவர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என தெரிவித்தனர்.
ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் கிறிஸ்துவர்களின் பிரார்த்தனை கூட்டத்தில் புகுந்து இந்துத்வ அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் மீது வெருப்பைத் தூண்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்பதையே இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.