ஒன்றிய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை தயாரித்த 2021-ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தையொட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார்.
நல்லாட்சி குறியீடு விவசாயம், வணிகம், சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. இதில் நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
சுகாதாரத்துறையில் தமிழ்நாடு மூன்றாமிடம் பெற்றுள்ளது. ஆந்திரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு துறைகளில் முதலிடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல மேடைகளில், “இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சராக என்னைக் குறிப்பிடுகிறார்கள். நம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட, இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு எனச் சொல்லப்படவேண்டும் என்பதே எனது இலக்கு” எனக் குறிப்பிட்டு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில், அவரது சீரிய தலைமையின் கீழ் தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் தொடர் முன்னேற்றம் கண்டு வருகிறது.