கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தின் ஹரவாலே கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணும், பக்கத்து கிராமத்தில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த மகேந்திரா என்ற நபரும் வெகுநாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
பெண்ணின் தந்தை பசவராஜ் நாயக் காதலுக்கு ஒப்புக்கொள்ளாததால் வீட்டை எதிர்த்து இருவரும் கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று திருமணம் செய்திருக்கிறார்கள். மேலும் தங்களது திருமணத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து பதிவு செய்த திருமண சான்றிதழை வாங்குவதற்காக விதான் சவுதாவில் உள்ள நஞ்சன்கூடு அலுவலகத்திற்கு சித்ராவும், மகேந்திராவும் வருவதை அறிந்த பெண்ணின் தந்தை அங்கு சென்று பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் முன்பே சித்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து செல்ல முயன்றிருக்கிறார்.
இந்த செயலைக் கண்ட அங்கிருந்தவர்கள் பசவராஜ் நாயக்கை தடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பித்த சித்ராவும் மகேந்திராவும் காவல்நிலையத்திற்கு சென்று பசவராஜ் நாயக் மீது புகாரளித்திருக்கிறார்கள்.
அதில், தந்தை பசவராஜ் நாயக்கால் எங்கள் இருவரது உயிருக்கும் ஆபத்து உள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சித்ராவும் மகேந்திராவும் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் பெண்ணின் தந்தையை வரவழைத்து இருவருக்கும் தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதனிடையே பதிவுத்துறை அலுவலகத்தில் வைத்து சித்ராவின் முடியை பிடித்து இழுத்த பசவராஜ் நாயக்கின் செயலை வீடியோவாக எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.