இந்தியா

தங்க நகையை கவரிங்காக மாற்றி ₹35 லட்சம் சுருட்டிய புதுவை கூட்டுறவு வங்கி ஊழியர்; வாடிக்கையாளர்கள் பதற்றம்

புதுச்சேரி நகர கூட்டுறவு வங்கியில் தங்கத்துக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து ரூ.35 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தங்க நகையை கவரிங்காக மாற்றி  ₹35 லட்சம் சுருட்டிய புதுவை கூட்டுறவு வங்கி ஊழியர்; வாடிக்கையாளர்கள் பதற்றம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி லாஸ்பேட்டை பிரதான சாலையில் நகர கூட்டுறவு வங்கிக்கிளை உள்ளது. இங்கு மக்கள் தங்கள் அவசர தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன்பெற்றுள்ளனர். அவ்வாறு அடமானமாக வைத்த தங்க நகைகளை, அங்குள்ள ஊழியர் ஒருவர் எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்ததாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து நகர கூட்டுறவு வங்கியின் உயர் அதிகாரிகள் அந்த வங்கியில் வைத்திருந்த நகைகளை ஆய்வு செய்தனர். அதன்படி அடகு வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பைகளை ஆய்வு செய்ததில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

சுமார் ரூபாய் 35 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வங்கி சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வங்கி உயர் அதிகாரிகள், அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இது பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.

வேறு ஏதேனும் மோசடி நடந்துள்ளதா என்பது குறித்தும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. துறை ரீதியான முழுமையான விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. தங்க நகைகளுக்கு பதிலாக அதேபோல் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது பற்றிய தகவல் அறிந்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கள் நகை என்னவானதோ? என்று அவர்கள் பதற்றமடைந்தனர். நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் புதுவை லாஸ்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories