உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் இப்போதிலிருந்தே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் போட்டிப் போட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அடிக்கடி சென்று வருகிறார். இதைக் கொண்டு பா.ஜ.க தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, "நான் இந்து, இந்துத்துவாவாதி அல்ல" என பா.ஜ.க அரசியலை விமர்சித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சைக் குறிப்பிட்டு பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, "ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர். அவர்கள் செல்லும் பாதை நீதி நேர்மை இல்லாதது. அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்து மதம் போதிக்கிறது. இந்த வேறுபாட்டைத்தான் ராகுல்காந்தி மக்களுக்கு எடுத்துக் காட்டினார்" என தெரிவித்தார்.