நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இதர ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விழுந்தில் கோர விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் தலைவர் என பலரும் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி பிபின் ராவத்தை மறைவையொட்டி முக்கிய உத்தரவினை அக்கட்சியினருக்கு விடுத்துள்ளார்.
அதன்படி, நாளை (டிசம்பர் 9) சோனியா காந்தியின் 74வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட இருந்த காங்கிரஸாரிடம் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என பணித்துள்ளார்.
ஏனெனில், ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட வீரர்கள் உயிரிழந்த நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் சோனியா காந்தி கூறியுள்ளார்.