"பா.ஜ.கவிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதால் அவர்கள் என்னை திகார் சிறைக்கு அனுப்பினர்" என காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜ.க அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட கர்நாடகா மாநில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில், பணம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகளின் கூட்டில் ரெய்டு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பா.ஜ.க அரசை விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திகார் சிறைக்குச் சென்றது ஏன் என பா.ஜ.க அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சிவக்குமார், "நான் பா.ஜ.கவுக்கு ஆதரவளிக்கவில்லை. அவர்களுடன் செல்லவில்லை என்பதால் என்னை திகார் சிறைக்கு அனுப்பினர். நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த ஆட்சியாகக் கர்நாடகாவின் பா.ஜ.க ஆட்சி உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பா.ஜ.கவில் சேர்ந்திருந்தால் சிறைக்குச் சென்றிருக்க மாட்டீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவக்குமார், "இது எல்லாருக்கும் தெரிந்ததுதான், என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் சிவக்குமார் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.