உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலை 101 ஆக இருப்பதைத் தடுக்க, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என மக்கள வையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
ஒன்றிய முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத்தலை வருமான டி.ஆர். பாலு மக்களவையில், உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்திய நாட்டின் நிலை 101-ஆக இருப்பதை சரிசெய்ய, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், வறுமையின் பிடியில் வாழும் பெண்கள், குழந்தைகளின் நிலைமைகளை அறிய ஆய்வுகள் ஏதேனும் உள்ளதா? என்றும், சத்துக் குறைபாடினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசினால் முயற்சிகள் எடுக்கப்பட்டனவா? என்றும், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையின் அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஈரானியிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.
ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையின் அமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின் வருமாறு:
சத்துக் குறைபாடு, குழந்தைகள் உயிரிழப்பு, குழந்தைகளின் எடை மற்றும் உயரக் குறைவு இவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட உலகப்பட்டினிக் குறியீட்டின்படி இந்தியா 101வது இடத்தில் உள்ளது. சத்துக் குறைபாடு மட்டுமே இந்த ஆய்வில் ஏற்றுக் கொள்ளத்தக்க காரணி.பட்டினியால் குழந்தை இறப்பு அதிகரித்துள்ளதற்கான காரணம் இல்லை.
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திய அரசு 80 கோடி மக்களுக்கு உணவு கிடைப்பதை கடந்த நான்கு ஆண்டுகளில் உறுதி செய்துள்ளதை இந்த ஆய்வு நிறுவனத் தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆப்கானிஸ் தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவின் அளவிற்கு கொள்ளை நோய்த் தொற்றால்பாதிக்கப்பட வில்லை.உணவு மற்றும் விவசாய அமைப்பின்படி, சத்துக்குறைபாடு படிப்படியாகக் குறைந்து வருகின்றது.
மேலும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி குழந்தைகளின் எடை மற்றும் உயரக் குறைவு ஆகியவற்றை சமாளிப் பதில் ஒன்றிய அரசு ஓரளவுக்கு முன்னேறி வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உணவுத் தரத்தை மேம்படுத்தவும், சோதனைச் சாலைகளை நிறுவிடவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின்படி அங்கன் வாடி மையங்களை நிர்வகிக்கவும் மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது.
சத்துக்குறைபாடினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்புவிகிதம் தற்போது குறைந்து வருகிறது. 81 கோடிக்கும் அதிகமான மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.குடும்பம் ஒன்றிற்கு 35 கிலோ வரை உணவு தானியங்கள் வழங்கப்படு வதை, ஆய்வு நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இவ்வாறு ஒன்றிய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஈரானி,மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், டி.ஆர்.பாலு, எழுப்பிய கேள்விக்கு விரிவானபதிலை அளித்துள்ளார்.