வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்திற்குட்பட்ட திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று வேன் ஒன்றில் வீட்டிற்குச் சென்று கெண்டிருந்தனர்.
அப்போது ராணுவ வீரர்கள் தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூட, சொந்த மண்ணில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என விமர்சித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தியின் ட்விட்டரில், "அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இதயத்தை உலுக்குகிறது. சொந்த மண்ணில் மக்களுக்கும், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாதபோது உள்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இது குறித்து உண்மையான பதிலை அளிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.