வாகனங்களின் நம்பர் ப்ளேட் எண்களை தங்களது விருப்பத்திற்கேற்ப பணம் கட்டி பதிவு செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில், தாமாக அமைந்த நம்பர் ப்ளேட்டால் பெண் ஒருவருக்கு மிகப்பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த பெண்ணின் இருசக்கர வாகன நம்பர் ப்ளேட் விவகாரம் மாநில மகளிர் ஆணையம் வரை சென்றிருக்கிறது.
அதன்படி, தீப ஒளி பண்டிகையை முன்னிட்டு புதிதாக ஸ்கூட்டர் வாங்கிய பெண் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வாகன எண்ணால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புதிய வாகனத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்த அப்பெண்ணுக்கு DL 3S EX என்ற வரிசையில் வாகன எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. S EX என்பது SEX என படிக்கும் வகையில் இருப்பதால் அப்பெண் பெரும் மன சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
முன்னதாக, DL என்பது டெல்லி மாநிலத்தையும், அடுத்து வரும் எண் மாவட்டத்தையும், S என்றால் ஸ்கூட்டர், C என்றால் கார் என்றும் குறிப்பிடப்படும்.
புகார்தாரரான அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட எண்ணால் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதால் அவரால் ஸ்கூட்டரை வெளியே எடுக்கமுடியாத சூழல் உண்டாகியிருக்கிறது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தீர்வு காண டெல்லி மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
புகாரை ஏற்ற மகளிர் ஆணையம், போக்குவரத்துத் துறைக்கு விடுத்துள்ள நோட்டிஸில் இதேப்போன்று பதிவெண் மீது கொடுக்கப்பட்ட புகார், வாகனங்களின் எண்ணிக்கையை சமர்பிக்கவும், இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 4 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.