இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் தனது கட்டணத்தை உயர்த்திய அடுத்த நாளே வோடஃபோன் ஐடியா நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது. இதையடுத்து ஜியோ நிறுவனமும் விலையை அதிகரித்தது.
இப்படி அடுத்தடுத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தியது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் நெட்டிசன்கள் பலரும் தங்களின் சமூகவலைதளங்களில் ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் புறக்கணித்து, பி.எஸ்.என்.எல்-ஐ நோக்கிச் செல்வோம் என கருத்து பதிவிட்டனர். இவர்களின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ஆதரவான கருத்துகள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ஒன்றிய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுனிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை தனியார் நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல் போட்டி போடுவது சவாலாகவே இருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 4ஜியில் இருந்து 5ஜி சேவையைக் கொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையளிக்கத் தயாராகி வருகிறது.
தற்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினால், இதன் பயனாளர்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.