இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை எனவும், இந்தியாவின் பால்காரர் எனவும் அழைக்கப்படும் வர்கீஸ் குரியனின் நூற்றாண்டு தினத்தை ஒட்டி ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது படத்தை அச்சிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.
பால் உற்பத்தியை ஊக்குவிக்கவும், உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் நாடு முழுவதும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்திய வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான நவம்பர் 26 தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது.
பால் பற்றாக்குறை மிகுந்த நாடாக இருந்த இந்தியாவில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுத்து, நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைக்க வெண்மைப் புரட்சியே பெரும் காரணமாக அமைந்தது.
வெண்மை புரட்சிக்கு அடித்தளமாக இருந்த `operation flood’ திட்டத்தை உருவாக்கிய வர்கீஸ் குரியன் பின் நாளில் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும், இந்தியாவின் பால்காரர் என்றும் அழைக்கப்பட்டார்.
கோழிக்கோட்டில் பிறந்து, தமிழகத்தில் படித்து, குஜராத்தில் பணியாற்றி பாலே பிடிக்காத வர்கீஸ் குரியன் இந்தியாவின் பால்காரர் என அழைக்கப்படும் அளவிற்கு பால் புரட்சியில் மகத்தான பணியாற்றியவர். அவரின் பணியை போற்றும் வகையில், குரியனின் நூற்றாண்டு தினத்தை ஒட்டி அவரது படத்தை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு பெருமை படுத்தியுள்ளதை பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.