ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் அணையை உத்தர பிரதேசத்தில் உள்ள பந்தேல்கண்ட் அணை என பா.ஜ.க தலைவர்கள் சமூகவலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்து அம்பலப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். அப்போது பந்தேல்கண்ட் பகுதியை மேம்படுத்துவதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் பந்தேல்கண்ட் பகுதிக்கான நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆனால் பந்தேல்கண்ட் பகுதியில் புதிய அணை கட்டியதுபோன்று, இனி அப்பகுதியில் வறட்சியே இருக்காது என்பதுபோல் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் படத்துடன், அணையின் படத்தைக் குறிப்பிட்டு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் விளம்பரப்படுத்தினர்.
இதையடுத்து கட்டாத அணையைக் கட்டியதாக விளம்பரம் செய்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் விளம்பரம் செய்த அணையின் உண்மை என்னவென்பது குறித்துத் தேடியுள்ளனர்.
கடைசியில், ஆந்திரா -தெலங்கானா மாநிலங்களுக்கிடையே உள்ள ஸ்ரீசைலம் அணையைத்தான் பந்தேல்கண்ட் அணை என பொய்யாகப் பிரச்சாரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இவர்களின் போலி விளம்பரத்தை அம்பலப்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள். மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதில் போட்டோஷாப்பிலேயே எல்லாவற்றையும் நிறைவேற்றும் ஒரே கட்சி பா.ஜ.கவைத் தவிரே வேறு இருக்க முடியாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.