உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா அரசு மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒருவர் கையில் ஒரு பெரிய துணியில் ஏதோ ஒன்றைச் சுருட்டிக்கொண்டு கதறியபடி வந்தார்.
அவரைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் பதறிப்போய் என்ன ஏதென்று விசாரித்தபோது அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர் தனது வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராவிதமாகக் குழந்தை கிருஷ்ணரின் கை உடைந்து விழுந்துவிட்டதாகவும் அதனால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவரைக் காண வந்ததாகவும் கூறினார்.
அவரது கதறலைப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால் வேறு வழியின்றி அவரைச் சமாதானப்படுத்த "ஸ்ரீ கிருஷ்ணா" என்ற பெயரில் நோயாளியாகப் பதிவு செய்து மருத்துவர்கள் உடைந்த கையை ஒட்ட வைத்து அனுப்பினர்.
அந்த நபர் கதறிக்கொண்டே தன் வீட்டு குட்டி கிருஷ்ணருக்கு ஏற்பட்ட நிலையைச் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைலராக பரவி வருகிறது.
கிருஷ்ணரின் கை உடைந்துவிட்டதாக கதறியவரின் பெயர் லேக் சிங் என்றும், அவர் ஆக்ராவின் அர்ஜுன் நகரில் உள்ள பத்வாரி கோவிலில் கடந்த 30 ஆண்டுகளாக பூசாரியாக பணியாற்றி வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.