மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஜீரோ பேலன்ஸ் கணக்கு எனக் கூறி ஜன்தன் வங்கி திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்கு துவங்கிய ஏழை மக்களிடமிருந்து பரிமாற்றக் கட்டணம் என்ற பெயரில் ஸ்டேட் வங்கி ரூ.164 கோடி எடுத்துள்ளதாக மும்பை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியால் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதனால் இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்கு துவக்கியவர்களுக்குக் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் இந்தக் கணக்கு பயனாளர்களுக்கு டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு கட்டணம் எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் நான்கு முறைக்கு மேல் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு ஸ்டேட் வங்கி பணம் எடுத்துள்ளது.
உதாரணமாக, ஜன்தன் வங்கிக் கணக்கு பயனர் ஒருவர் முதலில் 4 முறை டிஜிட்டல் பரிமாற்றத்திற்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் 5வது முறை பரிமாற்றத்திலிருந்து ரூ.17.70 வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்த ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இப்படிக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ.250 கோடியை ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது. இதுபற்றி அறிந்த ஒன்றிய அரசு, வசூல் செய்யப்பட்ட பணத்தை உடனே பயனாளர்களுக்குத் திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறியது.
இதையடுத்து ஸ்டேட் வங்கி ரூ.90 கோடியை ஜன்தன் வங்கி பயனர்களுக்குக் கொடுத்தது. ஆனால் இன்றுவரை ரூ.164 கோடியைத் திருப்பிக் கொடுக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மும்பை ஐ.ஐ.டியின் அறிக்கையை சுட்டிக்காட்டித்தான் ராகுல்காந்தி ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், இந்தக் கணக்கில் உள்ள பணத்தை வைத்திருப்பவர்களுக்கு யார் பொறுப்பு?” என பதிவிட்டு ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.