வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தும்கூர் மாவட்டம் ஹொரட்டஹரே தாலுக்காவில் செல்ல கூடிய ஜெயமங்கலி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ள பெருக்கால் அங்குள்ள பாலம் நீரில் மூழ்கி உள்ளது.
அப்பகுதியின் முக்கிய வழியாக உள்ள அந்த பாலத்தை பொதுமக்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
பாலத்தில் இருந்து சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த இளைஞர் நல்வாய்ப்பாக ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள மரக்கிளையை பிடித்து கரை சேர்ந்தார். இந்த காட்சியை அங்கு இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வளைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.