மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த கருப்பு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர்,
கடந்த நம்பவர் 6ம் தேதி துவங்கிய விவசாயிகளின் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்தது இல்லை என வரலாற்று அறிஞர்கள் கூறிவந்தனர்.
அந்த அளவுக்கு தங்களின் நியாயமான கோரிக்கையை நம்பிக்கையுடன் விவசாயிகள் போராடி வந்தனர். டிரக்டர் பேரணி, சாலை மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இவர்களின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணித்து வந்தது.
மோடி அரசின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 4 சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கியது மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக இன்று காலை காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கிறேன் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றி சமர்பனம் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்களை தி.மு.க முன்னெடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்நிலையில், “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!
மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!
உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!
அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.