அசாம் மாநிலம் கவுஹாத்தி மாநகராட்சியில் ஸ்பாக்கள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களில் எதிர்பாலினத்தவர்களைக் கொண்டு மசாஜ் மற்றும் அழகு செய்ய தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கவுஹாத்தி மாநகராட்சி ஆணையர் தேவாஷிஷ் சர்மா வெளியிட்டுள்ள உத்தரவில், "ஸ்பாக்கள் மற்றும் யுனிசெக்ஸ் பார்லர்களில் பல முறைகேடுகள் நடப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
எனவே பொது ஒழுக்கம் மற்றும் குடிமை சமூகத்தை நிர்வகிக்கும் சட்டங்களை மதிக்க மாநகராட்சி கடமைப்பட்டுள்ளது. எனவே புதிய விதிகளின்படி இனி பார்லர்கள், ஸ்பாக்கள், சலூன் கடைகள் தனி அறைகள் அல்லது அறைகள் இருக்கக்கூடாது. பிரதான கதவுகளுடன் வெளிப்படையானதாக அறைகள் இருக்க வேண்டும்.
மேலும், ஆண்களுக்குப் பெண்களோ அல்லது பெண்களுக்கு ஆண்களோ அழகுபடுத்தவோ அல்லது மசாஜ் செய்யவோ கூடாது. இந்த புதிய நடைமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.