மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தைச் சேர்ந்தவர் அக்ஷய் அதாவாலே. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அகான்ஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமணம் நடந்து ஒரே வருடத்தில் கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர்.
ஆனால், அகான்ஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அக்ஷய் சந்தேகப்பட்டுவந்துள்ளார். இதனால் அவருக்குத் தெரியாமல் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், உன்னைச் சந்திக்க வேண்டும் என அகான்ஷாவின் பிறந்த நாளன்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கு அகான்ஷா பதில் எதுவும் அனுப்பவில்லை.
இதனால் அவரை பார்க்க அக்ஷய் சென்றுள்ளார். அப்போது, அகான்ஷா ஆட்டோவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவர் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று, வழிமறித்து நிறுத்தியுள்ளார்.
பிறகு அகான்ஷாவை ஆட்டோவில் இருந்து இழுத்து கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது பற்றி அறிந்து விரைந்து வந்த போலிஸார் அகான்ஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அக்ஷயை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.