கர்நாடகா மாநிலம், பூனஹள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயியான இவர் 2019ம் ஆண்டு திருமணம் நிகழ்வில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு வந்துள்ளார். அப்போது அவருக்கு ஷாஹிகுமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.பின்னர், இருவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து 2020ம் ஆண்டு ஷாஹிகுமார் கர்நாடகா சென்று ஸ்ரீனிவாஸ் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது ஸ்ரீனிவாசின் வீடு 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதை அறிந்து இந்த வீட்டில் புதைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த புதையலை எடுக்காவிட்டால் உங்கள் வீட்டில் கெட்ட சம்பவங்கள் நடக்கும் என ஸ்ரீனிவாஸ் குடும்பத்திடம் கூறியுள்ளார். அதேபோல் இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி அவர்களிடம் ரூ. 20 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.
பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பரிகாரம் எதுவும் செய்யாமல் தள்ளிவைத்து வந்துள்ளார் ஷாஹிகுமார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்து பரிகாரம் செய்வது குறித்துப் பேசியுள்ளார்.இதற்கு ஸ்ரீனிவாஸ் குடும்பமும் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து பூஜைக்காக ஏற்பாடுகளைச் செய்தபோது, உங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் நிர்வாணமாகப் பூஜையில் அமர வேண்டும். அப்போதுதான் புதையல் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனால் ரூ.5000ம் கொடுத்து ஒரு பெண்ணை ஸ்ரீனிவாஸ் நிர்வாண பூஜைக்கு அழைத்து வந்துள்ளார்.
பிறகு ஸ்ரீனிவாஸ் வீட்டில் நடப்பதை அறிந்த உள்ளூர் வாசிகள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலிஸார் நிர்வாண பூஜைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணையும், அவரது குழந்தையையும் மீட்டனர். மேலும் போலிச்சாமியார் ஷாஹிகுமார், உதவியாளர் மோகன் மற்றும் உடந்தையா செயல்பட்ட லட்சுமி நரசப்பா, லோகேஷ்ம் நாகராஜ் மற்றும் பார்த்த சாரதி ஆகிய ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர்.