இந்தியாவில் 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் மட்டும் 11396 குழந்தைகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து NCRB வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ம் ஆண்டு மட்டும் 18 வயதிற்குட்பட்ட 11396 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 18% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் 9613 பேரும், 2018ம் ஆண்டில் 9413 குழந்தைகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் 2020ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளில் 5392 பேர் ஆண்கள், 6004 பெண் குழந்தைகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குடும்பப் பிரச்சனை, காதல், உடல்நிலை, போதை, இயலாமை போன்றவை தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம், செல்போன் இல்லாதது போன்ற காரணத்தாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக NCRB அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.