சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக பி.பி நாயக் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை பி.பி நாயக் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். பிறகு கல்லூரி ஓய்வறையில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஓய்வறைக்கு வந்த கல்லூரி காவலாளி இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு கல்லூரிக்கு வந்த போலிஸார் கல்லூரி முதல்வர் பி.பி.நாயக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
கல்லூரி முதல்வர் தூக்கிட்டு இறந்த இடத்தில் போலிஸார் ஆய்வு செய்தபோது கடிதம் ஒன்று கிடைத்தது. இதில் தனது தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியிலேயே, கல்லூரி முதல்வர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.