கர்நாடகா மாநிலம், தாவணகெரே மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னேசப்பா. மருத்துவரான இவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டு சில்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சன்னேசப்பா அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் மதுவுக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சில்பா திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனைவிக்கு சன்னேசப்பாவே சிகிச்சையளித்துள்ளார். அப்போது அவருக்கு ஊசியையும் செலுத்தியுள்ளார். உடனே சில்பா மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்தது குறித்து அவரது பெற்றோருக்கு சன்னேசப்பா தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர்கள் வந்து பார்த்தபோது மகள் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். பிறகு அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதாகக் கூறி சன்னேசப்பா காரில் அழைத்துச் சென்றார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் வீடு திருப்பினார்.
இதுபற்றி கேட்டபோது, சில்பா காரில் செல்லும்போதே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதை நம்பாத அவரது பெற்றோர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து கணவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவருக்கு அளவுக்கு அதிகமாக மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்ததாகக் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.