இந்தியாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது 100 ரூபாயைக் கடந்து விட்டது. கொரோனா நெருக்கடியான காலத்திலும் பெட்ரோல் விலை உயர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற குரல் நாடுமுழுவதும் எழுந்து வருகிறது. ஆனால் பா.ஜ.க தலைவர்களோ, “பெட்ரோல் விலை கூடுனா சைக்கிள் ஓட்டுங்கள், இது எல்லாம் ஒரு பிரச்சனையா" என்றும் "விலை உயர்வு குறித்துப் பேசுவோர் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லுங்கள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
அண்மையில்,அசாம் மாநில பா.ஜ.க தலைவர்பாபேஷ் கலிடா, 200 ரூபாயை பெட்ரோல் விலை எட்டினால் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில அரசுகளுக்கு புது ஐடியா கொடுப்பதாக நினைத்து காமெடி செய்தார்.
இவர் பேசி இரண்டுநாட்களே ஆன நிலையில், அதற்குள் உத்தர பிரதேச அமைச்சர் நாட்டில் பெட்ரோல் பயன்பாடுகள் குறித்து அதிசய புதிய புள்ளி விவரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இது என்னவென்றால், உத்தர பிரதேச அமைச்சர் உபேந்திரி திவாரி பேசும் போது, “பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவே இல்லை. 2014ம் ஆண்டிலிருந்த தனிநபர் வருவாய் தற்போது அதிகமாகியுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை பொருட்படுத்த வேண்டியதில்லை.
நமதுநாட்டில் 4 சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. இதனால் 95% மக்களுக்கு பெட்ரோலின் அவசியம் தேவையில்லை” என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த புதிய பள்ளி விவரம் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.