முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாகப் பேசியதால் தெலங்கு தேசம் கட்சி அலுவலகத்தை YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருப்பவர் பட்டாபிராம். இவர் செய்தியாளர் சந்திப்பின் போது, YSR கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாகப் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மங்களகிரி பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் வீடுகளிலும் புகுந்து பொருட்களை அடித்துச் சூறையாடியுள்ளனர்.
அதேபோல் விசாகப்பட்டினம், அமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகங்களை YSR காங்கிரஸ் தொண்டர்கள் அடித்துச் சேதப்படுத்தினர். இதனால் ஆந்திரா மாநிலம் முழுவதும் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "இது போன்ற ஒரு மோசமான செயலை எனது அரசியல் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. இது ஒரு கருப்புநாள். எங்கள் அலுவலகத்தில் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாமல் போலிஸார் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.