அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. இதனால், அந்நிறுவனத்தை விற்க கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் டிசம்பர் இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்பதிற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏர் இந்தியா விற்பனை, பட்டப்பகலில் நடந்ததைக் கொள்ளை என மோடி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சீதாராம் யெச்சூரி, “இந்திய நாட்டின் சொத்துக்களை ஒன்றிய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஒன்றிய அரசு விற்றுள்ளது.
இது டாடா நிறுவனத்திற்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போல் உள்ளது. மேலும் இது பட்டப்பகலில் நடந்துள்ள கொள்ளையாகும். டாடா நிறுவனம் ரூ.15,300 கோடிக்குக் கடனை ஏற்றுக்கொண்டாலும் அது மறுசீரமைக்கப்பட்டு விடும். மீதி ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே ஒன்றிய அரசுக்குக் கொடுக்கும்.
ஆனால், ஏர் இந்தியாவின் மீதி கடன் ரூ.46 ஆயிரத்து 262 கோடியை ஒன்றிய அரசுதான் ஏற்க வேண்டி இருக்கும். இதனால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன் சுமத்தப்படும். அதேநேரம் டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவின் அனைத்து சொத்துக்களும் சொந்தமாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.