திருடச் செல்லும் வீட்டில் பணம் அல்லது நகைகள் இல்லை என்றால் கொள்ளையர்கள் பொருட்களைச் சேதப்படுத்துவது, வீட்டில் இருக்கும் உணவுப்பொருட்களை நன்றாகச் சாப்பிட்டு செல்வது போன்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவற்றை மிஞ்சும் அளவுக்கு மத்திய பிரேதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் திருடவந்தபோது வீட்டில் பணம் இல்லாததால், பணம் இல்லாத வீட்டிற்கு எதற்கு பூட்டு என கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளான் திருடன் ஒருவன்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கான குடியிருப்பு பகுதி உள்ளது. இதில் மாவட்ட துணை ஆட்சியர் திரிலோசன் கௌர் வீடு உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக வீட்டிற்குச் செல்லாமல் இருந்த ஆட்சியர் சனிக்கிழமையன்று சென்றுள்ளார்.
அப்போது, வீட்டைத் திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலிஸாருக்கு தெரிவித்தார். பின்னர் அவரது வீட்டிற்கு வந்த போலிஸார் அவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது கடிதம் ஒன்று அவர்களது கையில் சிக்கியது. இதில், "வீட்டில் பணமில்லை என்றால், எதற்கு பூட்டிவிட்டுச் செல்கிறீர்கள் ஆட்சியரே" என எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் முக்கிய அதிகாரிகள் இருக்கும் பகுதியிலேயே இந்த கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது போலிஸாருக்கு ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.