உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த வாரம் சாலையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம், தலையில் பலத்த காயத்துடன் குரல்வளை நொறுங்கிய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியின் கிராம மக்கள் குற்றவாளியைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் அளித்த வாக்குறுதியின்படி கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனையடுத்து சிறுமி கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில், கொலை நடந்த நேரத்தில் சிவப்பு டீசர்ட் அணிந்த மர்ம நபர் அப்பகுதியில் ஓடியதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனைக் கொண்டு விசாரணையை கையில் எடுத்த போலிஸார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற 21 வயதாகும் இளைஞர் ஒருவர் அந்தச் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் அவரைப் பிடித்து விசாரித்ததில் சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக அவரது இரண்டு நண்பர்கள் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
காதலை ஏற்க மறுத்த சிறுமியை ஆத்திரத்தில் கீழே தள்ளிவிட்டதாகவும் அதில் தலையில் அடிப்பட்டு மயங்கிய சிறுமியை, கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கொலை செய்த பின்னர் தப்பியோடிய மூவரும் தலைமறைவாகி விட்டு, சிறுமிக்காக ஊர் மக்கள் நடத்திய போராட்டத்தில் எதுவும் தெரியாதது போல் கலந்துகொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.