உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பேரை மட்டுமே உத்தர பிரதேச போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாகப் பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்திப்பதற்கு முன்பு கூட ராகுல்காந்தி, லக்னோ சென்ற பிரதமர் மோடி, ஏன் லக்கிம்பூர் கிராமத்திற்குச் செல்லவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பிரச்சனை குறித்து ஏன் போசாமல் இருக்கிறார் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், லக்கிம்பூர் கொடூர சம்பவம் அறிந்தும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில், “லக்கிம்பூர் கெரி சம்பவம் உண்மையில் கொடூரமானது. ஆனால், ஏன் நீங்கள் அதுகுறித்து அறிந்தும் மவுனமாக இருக்கிறீர்கள் மோடி.
கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் வார்த்தை உங்களிடம் இருந்து வருவது எங்களுக்கு அவசியம். அது ஒன்றும் கடினமானதாக இருக்காதே. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எவ்வாறு நீங்கள் எதிர்வினையாற்றி இருப்பீர்கள். தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள்" எனத் தெரிவித்தார்.