வேளாண் சட்டங்கள் மற்றும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் நால்வர் பலியான விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு நாட்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஆளும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதையடுத்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உத்தர பிரதேசத்துக்கு விரைந்துள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
லக்கிம்பூர் வன்முறையால் பெரும் பதற்றம் நிலவும் வேளையில் அமித்ஷாவுடனான அஜய் மிஸ்ராவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் தனது காரை விவசாயிகள் மீது ஏற்றி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆகவே ஒன்றிய இணையமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அமித்ஷாவுடன் அஜய் மிஸ்ரா ஆலோசானையில் ஈடுபட்டிருப்பது இவ்விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.