புதிய பாடத்திட்டப்படி நீட் எஸ்.எஸ். நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
திடீரென நவம்பர் மாத தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டிருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பின் நோக்கம் சிதைந்துவிடும். மேலும், தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று 41 மருத்துவ மாணவர்கள் சார்வில் வாதிடப்பட்டது.
ஒன்றிய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி சீட் பல கல்லூரிகளில் காலியாக இருக்கிறது. அதனை நிரப்பும் வகையில் அனைவரும் தேர்வு எழுதும் விதமாக பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. நீட் எஸ்.எஸ் தேர்வு மேலும் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் புதிய பாடத்திட்டபபடி தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்கப்படாமல் அவசரகதியில் தேர்வுக்கான பாடதிட்டத்தை ஏன் மாற்ற வேண்டும்? ஏன் இந்த அவசரம்? இது மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 500 இடங்களை நிரப்புவதற்காக பாடத்திட்டத்தை மாற்றுவதை ஏற்க முடியாது. மருத்துவக் கல்வி இன்று பெரும் வணிகமாக மாறிவிட்டது. மருத்துவக் கல்வி நாட்டில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஓராண்டுக்கு இதனை ஒத்திவைத்தால் வானம் இடிந்து விழுந்துவிடாது.
கூடுதலாக 2 மாதம் அவகாசம் வாங்குவதால் எந்த பலனும் மாணவர்களுக்கு ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.