மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், அவரைக் கொன்ற கோட்சே வாழ்க என ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் 152ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில், காந்தியின் செயல்பாடுகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி, காந்தியை இந்துமத வெறியனான கோட்சே சுட்டுக் கொன்றான். அகிம்சையின் அடையாளமாக விளங்கிய காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவை இந்துத்வ வெறியர்கள் புகழ்வது வாடிக்கை.
பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் கோட்சேவை புகழும் விதமாகவும், காந்தியை இகழ்ந்தும் பேசியுள்ளனர். பா.ஜ.க எம்.பியே கோட்சேவை தேசபக்தர் எனச் சொன்ன நிகழ்வும் நடந்துள்ளது.
இந்நிலையில், காந்தியின் பிறந்தநாளான இன்று, ‘கோட்சே ஜிந்தாபாத்’ என்ற ஹேஷ்டேக்கில் இந்துத்வ வெறியர்கள் பதிவிட்டு வந்தனர். இதனால் ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலை பலரும் கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ.க எம்.பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “'கோட்சே ஜிந்தாபாத்' என, ட்வீட் செய்தவர்கள் பொறுப்பற்ற முறையில் தேசத்தை அவமானப்படுத்துகிறார்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.