பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவர் அண்மையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுள்ளார்.
இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங், திடீரென அமித்ஷாவை சந்தித்தார். இதனால் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் அமரீந்தர் சிங்கின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்து கேள்விகளை எழுப்பினர். ஆனால் அவருக்கு பதிலாக அதே பெயர் கொண்ட இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் அமிரீந்தர் சிங்கிற்கு டேக் செய்திருந்தனர்.
இதனால் தனக்கு தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருவதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கோல்கீப்பர் நான் அவர் இல்லை என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டரில் 'அன்பான ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களே நான் இந்திய அணியின் கோல்கீப்பர் அமரீந்தர் சிங். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் இல்லை. தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ''என் இளம் நண்பனே, நான் உன் நிலையைக் கண்டு பரிவு கொள்கிறேன். சிறப்பாக விளையாட வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.