இந்தியாவில் பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பில்," கர்நாடகாவில் இந்துக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதாகப் புகார்கள் வருகிறது. இதை அனுமதிக்க முடியாது.
இந்த நடவடிக்கை தடுக்க ஆட்சியர்களுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் கர்நாடகாவில் விரைவில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கெனவே ஒருசில மாநிலங்கள் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதால் அவற்றை ஆராய்ந்து அதன்படி கர்நாடகாவுக்கு ஏற்ற மாதிரி சட்டம் வடிவமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.