மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மல்வானி பகுதியில் உள்ள கடற்கரையில், நேற்று முன்தினம் இரவு கடலில் குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிறகு விரைந்து வந்த நிர்பயா பிரிவு தனிப்படை போலிஸார், கடற்பகுதிக்கு வந்து உடனே அந்தப் பெண்ணை மீட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு கணவருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அந்தப் பெண் உடனே கணவரையும், தனது நான்கு வயதுக் குழந்தையையும் வீட்டில் பூட்டிவைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்வதற்காகக் கடற்கரைக்கு வந்துள்ளது போலிஸார் நடந்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நிர்பயா குழு போலிஸார் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து அவர்களை அனுப்பிவைத்தனர். கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உடனே மீட்ட நிர்பயா பிரிவு போலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற குற்றங்கள் தடுக்கும் விதமாக மாநிலங்களில் போலிஸ் துறையில் நிர்பயா என்ற பிரிவு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.