அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கச்சென்றபோது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலம் தரங் மாவட்டம் தால்பூர் பகுதியில் வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள், சுமார் 2,800 ஏக்கர் நிலத்தில் குடியிருப்புகள் அமைத்திருந்தனர். அந்த நிலங்களை மீட்க அசாம் மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
487 ஏக்கர் நிலங்கள் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான போலிஸார் நேற்று சென்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அப்போது, போலிஸாரை நோக்கி குச்சியுடன் வந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதுடன், சுருண்டு விழுந்த அவரை லத்தியால் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். காவலர்கள் 9 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மாநில அரசே வன்முறையை தூண்டிவிட்டுள்ளதாக ச் சாடியுள்ளார்.
மேலும் அசாம் மாநில சகோதர, சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும், எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.