கேரளாவில் சமீபமாக வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வரதட்சணை கொடுமையை தடுக்கும் நோக்கில் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வரதட்சணை கொடுமையை ஒழிக்க, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகங்களில், மாணவர்களை சேர்க்கும் போதும், அவர்களுக்கு பட்டம் அளிக்கும்போதும், ‘வரதட்சணை வாங்க மாட்டேன் மற்றும் வரதட்சணை கொடுக்க மாட்டேன்’ என உறுதிமொழி பத்திரத்தில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்கவேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கோழிக்கோடு பல்கலைக்கழகம், “வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்” என அறிவித்துள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகம், சேர்க்கை படிவம் மற்றும் பட்டம் வழங்கும் படிவத்தில், 'திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ மாட்டோம்' என்ற அறிவிப்பில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கி உள்ளது.
“வரதட்சணை வாங்க மாட்டேன்” என உறுதிமொழி படிவத்தில் மாணவர்கள் கையெழுத்திட்ட பின்னரே மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் பட்டம் வழங்கப்படும். பிற்காலத்தில் வரதட்சணை வழங்கினால் அல்லது வாங்கினால் அந்த மாணவ, மாணவியரின் பட்டம் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 391 கல்லூரிகளில் இந்த வரதட்சணை உறுதிமொழி ஏற்பு பின்பற்றப்பட இருக்கிறது.
முன்னதாக, கேரளாவின் மீன்வளம் மற்றும் கடல் சார் பல்கலைகழகத்தில் 386 மாணவர்கள் இதுபோன்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.