அதிகாரத்தில் இருக்கும் என் போன்றோரின் செருப்பை எடுத்துக் கொடுப்பதற்குத்தான் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று, பா.ஜ.க மூத்த தலைவர் உமா பாரதி பேசியிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழுவொன்று உமா பாரதியை போபாலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளனர். “ஒன்றிய பா.ஜ.க அரசானது சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து உமா பாரதியைச் சந்தித்துள்ளனர்.
அப்போதுதான் உமா பாரதி மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். “அரசு அதிகாரிகள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். அவர்கள் இருப்பதே எங்கள் செருப்புக்களைத் தூக்கத்தான். அரசு அலுவலர்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. என்ன நடக்கும் என்று என்னைக் கேளுங்கள். நான் சொல்கிறேன். ஒன்றிய அமைச்சராகவும் முதலமைச்சராகவும் 11 ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.
முதலில் ஆலோசனைகள் நடைபெறும். அதன் பின்பு தான் அறிக்கைகள் தயார் செய்யப்படும். அரசியல்வாதிகளை அரசு அலுவலர்கள் கட்டுப்படுத்துவது எனச் சொல்வதெல்லாம் முட்டாள்தனமானது. அவர்களால் அதனைச் செய்யவே முடியாது. அவர்களுக்கு எங்கு அதிகாரம் உள்ளது? அவர்களுக்குச் சம்பளம் அளிப்பது அவர்களைப் பணி அமர்த்துவது எல்லாம் நாங்கள்தான். அவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பது, பதவி இறக்கம் செய்வதும் நாங்கள்தான். எங்களின் அரசியலுக்காகத்தான் அவர்களைப் பயன்படுத்துகிறோம்” என்று உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பேச்சுக்கு உமா பாரதி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். “என்னை மன்னித்துவிடுங்கள். எனது நோக்கம் சரியாக இருந்தாலும், நான் பயன்படுத்திய வார்த்தைகள் சுய கட்டுப்பாட்டை மீறும் வகையிலேயே அமைந்திருந்தது. அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்களின் போது கூட இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நான் இன்று முதல் பாடம் கற்றுக்கொண்டேன்” என்று பின் வாங்கியுள்ளார்.