மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதியைப் பிற்படுத்தப்பட்டோர் மகா சபாவைச் சேர்ந்த குழுவினர் சந்தித்தனர். அப்போது இவர்கள் சில கோரிக்களை அவரிடம் முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் பேசிய உமாபாரதி, அதிகாரிகள் இருப்பதே எங்கள் செருப்புகளைத் தூக்கத்தான் என பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உமா பாரதியின் பேச்சால் அரசு அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த வீடியோவில், அரசு அதிகாரிகள் ஒன்றுக்கும் லாயக்கு இல்லாதவர்கள். அவர்கள் இருப்பதே எங்கள் செருப்புகளைத் தூக்கத்தான். அரசியல்வாதிகளை அரசு அலுவலர்கள் கட்டுப்படுத்துவது என சொல்வது எல்லாம் முட்டாள்தனமானது. என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் உமா பாரதியின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள். எதிர்ப்புக்குக் குரல் வலுத்ததை அடுத்து உமா பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில், "என்னை மன்னித்துவிடுங்கள். நான் பயன்படுத்திய வார்த்தைகள் சுய கட்டுப்பாட்டை மீறும் வகையிலேயே அமைந்திருந்தது. அதிகாரப்பூர்வமற்ற உரையாடல்களின்போது கூட இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார்.