உலகமே கடந்த இரண்டு வருடங்கலாக கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற உலகம் முழுவதும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதும் கொரோனா தொற்று உருமாறிக் கொண்டே வருவது மருத்துவ உலகத்திற்குச் சவாலாக உள்ளது.
இதேநேரம் கொரோனா குறித்த பொய்யான தகவல்களும் அவ்வப்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கூட கோமியம் குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் அறிவியலுக்கு எதிராக பேசினர். இவர்களின் பேச்சை நம்பி கோமியம் குடித்து உயிரிழந்த சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியது.
இந்நிலையில் உலகத்திலேயே இந்தியாவில் தான் கொரோனா குறித்து பொய்யான தகவல்கள் பரவியதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்து பொய்யான தகவல் பரவியது குறித்து ஆய்வு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்தான முடிவுகள் 'தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தால் கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா(15.94), அமெரிக்கா(9.44), பிரேசில்(8.57), ஸ்பெயின்(8.03) ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் கொரோனா குறித்தன தகவல்கள் வரும் போது அதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.