மத்திய பிரதேச மாநிலம், போபால் தலைநகரத்திற்குட்பட்ட டேனிஷ் நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
ஆனால், நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பெண்கள் மழை தண்ணீர் தேங்கிய குண்டும் குழியுமான சாலையில், 'கேட்வாக்' செய்து அழகிப்போட்டி நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கேட்வாக் செய்யும் போது சாலையைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்,”இந்த நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. இது குறித்து புகார் தெரிவித்தால் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த குண்டும், குழியுமான சாலையால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால், சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. நாங்கள் எதற்கு வரி செலுத்துகிறோம். சாலையைச் சீரமைக்க வில்லை என்றால் சொத்து வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி சேற்றில் நடந்து பெண்கள் கேட்வாக் செய்து நூதன போராட்டம் நடத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.