பெங்களூருவில் 18 வயதே ஆன ரித்தேஷ் ஜெயக்குமார் என்ற திருடன் சாலையில் செல்வோரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அதன்படி கடந்த செப்.,2ம் தேதி ரிச்மாண்ட் டவுன் என்ற பகுதியில் டாக்சி டிரைவரிடம் ரித்தேஷ் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். டிரைவர் பிரதீப் பாட்டீலிடம் கத்தியை காட்டி செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிக்க எத்தனித்திருக்கிறார்.
ஆனால் அந்த சம்பவம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனையடுத்து சுதாரித்த பிரதீப், ரித்தேஷை தள்ளிவிட்டு பொதுமக்களின் உதவியை நாடியிருக்கிறார். கூட்டம் கூடி ரித்தேஷை சுற்றி வளைத்து அடி பின்னியெடுத்திருக்கிறார்கள்.
அப்போது கையில் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார் ரித்தேஷ். இதனையடுத்து டாக்சி டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் திருடன் ரித்தேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைதான கையோடு தன்னை தாக்கியவர்கள் மீதே ரித்தேஷ் கொடுத்த புகார்தான் நிகழ்வின் சுவாரஸ்ய கட்டம். திருட முயற்சித்த போது என் தலை, கை, கால் மற்றும் முகத்தில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் எனக் குறிப்பிட்டு ரித்தேஷ் புகாரளித்திருக்கிறார்.
போலிஸாரின் திருடனின் புகாரை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு பொதுமக்களே சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.