மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து பொது சொத்துக்களையும் விற்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் பொது சொத்துக்களை விற்கவில்லை. குத்தகைக்குத்தான் விடுகிறோம்” என அலட்சியமாகக் கூறுகிறார்.
இந்நிலையில், நாட்டில் 70 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட சொத்துக்களைத் தனது நண்பர்களுக்குப் பிரதமர் மோடி வழங்கி விட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கேரள மாவட்டத்தில் காணொலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, “மோடி அரசு பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்டு வருகிறது. இதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. 70 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பட்ட சொத்துக்களைப் பிரதமர் மோடி சில குறிப்பிட்ட நண்பர்களுக்குத் தாரை வார்த்துள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புச்சார தொழிலாளர்களின் பணமதிப்பு குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நான்கு நண்பர்களின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது." என தெரிவித்துள்ளார்.