புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனை ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்குத் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு கொடுக்கப்பட்டு வருவதாக நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் தொடர்ந்து புகார் கொடுத்து வந்துள்ளனர்
இதையடுத்து உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமற்ற மற்றும் காலாவதியான காய்கறிகளைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கபடுவது உறுதியானதைத் தொடர்ந்து அந்த உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் புதுச்சேரியில் உள்ள பல உணவகங்களிலும் தரமற்ற உணவு தயாரிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைச் செயலர் அருண், "இந்த வாரம் முழுவதும் அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்வார்கள். அப்போது தரமற்ற உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தால் உணவு விடுதிகளுக்குச் சீல் வைக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.