இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது திறமையாளர்களின் வீடியோவை பதிவிட்டு பாராட்டி, தனது கருத்தைத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், சம்மீபத்தில் கேரளாவைச் சேர்ந்த களரிப்பயிற்று வீரரான சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதை தனது ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுப் பாராட்டு தெரிவித்திருந்தார்.
மேலும், சிறுவனுக்கு நீண்ட முடி இருந்ததால், அவரை சிறுமி என நினைத்துக்கொண்ட அவர் "யாருப்பா இந்த சின்னப் பொண்ணு, அவளோட வழியில யாரும் போயிடாதீங்க" எனப் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த அந்தச் சிறுவன் ஆனந்த் மஹிந்திராவுக்கு பதிலளித்துள்ளார். "சார் நீங்க கூறியதில் சிறிய மாற்றம். நான் சிறுமி அல்ல. பத்து வயது சிறுவன். களரிப்பயிற்று தொடர்பான குறும்படம் ஒன்று எடுக்க இருக்கிறோம். அதற்காக நீளமாக முடி வளர்த்துள்ளேன். நீங்கள் பாராட்டியதற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் பதிலைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா, "என்னுடைய பிழைக்கு ஆயிரம் மன்னிப்புகளைக் கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில் உங்களுடைய திறமையை மெச்சியதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்த்துகள், உங்களைப் போன்ற திறமையாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்" எனப் பதிலளித்துள்ளார்.
வயது வித்தியாசம் பார்க்காமல் சிறுவனின் பதிலை ஏற்று தனது பிழையைத் திருத்திக் கொண்டு மன்னிப்புக் கேட்ட ஆனந்த் மஹிந்திராவை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். களரிசுற்றிய சிறுவனின் பெயர் நீலகண்டன் நாயர். கேரளாவைச் சேர்ந்த இந்தச் சிறுவன் ஏகவீர களரிப்பயிற்று அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.