இந்திய ராணுவத்திற்காக கையெறி குண்டுகளை தயாரித்துள்ள சோலார் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் டெட்டனேட்டர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.
ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்திற்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அண்மையில் சேர்ந்த சாகேத் கோகலே, சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டெட்டனேட்டர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டுள்ள அவர், “சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு விட்டுச் சென்ற ஆயுதங்கள், இந்தியாவின் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை குர்திஷ் படைகள் கண்டறிந்துள்ளன.
துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் இந்த ஆயுதங்கள் சிரியாவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் நாக்பூரை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் நெருக்கமாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பயன்படுத்தியதாக 2016ஆம் ஆண்டே அறிக்கை வெளியான நிலையில், இந்திய ராணுவத்திற்கு வெடிபொருட்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் ஏன் வழங்கப்பட்டது என்றும் சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.