கர்நாடக மாநிலம் மைசூர் நகரின் வித்யாரண்யபுரம் முதலாவது முக்கிய சாலையில் நகைக்கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில், நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் மூன்று கொள்ளையர்கள் நுழைந்து, அங்கு ஆபரணங்களை வாங்குவதுபோல் நாடகமாடி பல்வேறு நகைகளை பார்த்துள்ளனர்.
அவர்கள் நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்வதாக உணர்ந்துகொண்ட கடையின் உரிமையாளர் இதைத் தடுப்பதற்கு முயற்சித்து கத்தி கூச்சலிட்டுள்ளார். மேலும், போலிஸாருக்கும் தகவல் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கடை உரிமையாளரை நோக்கி சுட்டுள்ளனர். உரிமையாளர் தன் தலையை சாய்த்ததால் அந்த குண்டு கடைக்கு வந்திருந்த மைசூர் தாலுகா தடத அள்ளி கிராமவாசி சந்துரு என்பவரின் மீது பாய்ந்தது. குண்டு தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
துப்பாக்கிச்சூட்டை அடுத்து பரபரப்பு அதிகரித்ததால் திருடர்கள் நகைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த நகைக்கடை முன்பு குவிந்தனர்.
வித்யாரண்யபுரம் காவல் நிலைய போலிஸாருக்கு விஷயம் தெரிந்ததும் போலிஸார் உடனே அங்கு வந்து சோதனை நடத்தி சந்துருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.