ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் அருகே மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் சாலையோரத்தல் செருப்புக் கடை நடத்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது பிழைப்பை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இரண்டு போலிஸார் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளியின் செருப்புக் கடையை அகற்றுமாறு கூறியுள்ளனர். அப்போது, காவலர்களுக்கும், மாற்றுத்திறனாளி அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த போலிஸார் மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் அவரை சாலையில் தரதரவெ இழுத்து அடித்து சித்ரவதை செய்தனர். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் என்னை விட்டுவிடுங்கள், நான் ஏழை எனக் கதறி அழுதார். அப்போதும் ஈவு இரக்கமின்றி போலிஸார் அவரை விடாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருந்தனர்.
போலிஸாரின் இத்தகைய வெறிச்செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போலிஸாரின் இந்த காட்டுமிராண்டித் தனத்துக்குப் பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான், போலிஸாரால் பொதுமக்கள் அதிக துயரங்கள் அனுபவித்து வருவது வேதனை அளிக்கிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், சாலையோரம் கடை நடத்திய மாற்றுத்திறனாளியை இரண்டு போலிஸார் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.