இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் காவல் நிலையங்களில் 5,569 கைதிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், போலிஸாரால் பொதுமக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் இந்தியாவில் தொடர்வது வருத்தமளிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மூலம் பொதுமக்களின் சட்ட உதவிகளுக்கான மொபைல் செயலி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “சமூகத்தைச் சட்டம் ஆள்கிறது. இதில், வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் நீதி, எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை. இந்த இடைவெளி நாம் சரி செய்ய வேண்டும்.
நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நாட்டு மக்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எளிய மக்கள் நீதி அமைப்புக்கு வெளியில் இருக்கிறார்கள். இந்த மொபைல் செயலி ஏழைகளுக்கும், சட்ட உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் ஆதரவாக இருக்கும்.
காவல் நிலையங்களில் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. மேலும் போலிஸாரால் பொதுமக்கள் அனுபவிப்பதும் துயரங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. எனவே நாடு முழுவதும் போலிசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.